Tuesday, January 23, 2018

சும்மாகூட இருப்பேன், ஆனா நான் தொடமாட்டேன்

பைக்கின் ஹெட்லைட் ஃபியூஸாகிவிட்டது. ஒரு வாரமாக ஹெட்லைட் இல்லாமல்தான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தேன். கடந்த சனிக்கிழமை வேறு புதிய பல்ப்பை மாட்டிவிட முடிவுசெய்த போதிலும் முடியாமல் போய், ஞாயிற்றுக்கிழமைதான் வாய்த்தது.

சரவணம்பட்டியில் பெருமாள் கோவிலின் எதிர்புறமிருக்கும் ஸ்பேர்பார்ட்ஸ் கடையில் பிலிப்ஸ் பிராண்ட் பல்பு ஒன்றை வாங்கிக்கொண்டு, ஆனந்தகுமார் மில்ஸ் எதிர்புறமிருந்த ஒரு ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப்புக்குச்  சென்றேன்.

அக்கடையில் ஒரு பையன் இருப்பான். மிக வேகமாக சடசடவென வேலையை முடிப்பான். ஸ்பீடா மீட்டர் கேபிளை ஒருமுறை அவன்தான் மாட்டிக்கொடுத்தான். பொதுவாக பைக்கில் கைவைத்தாலே முப்பது முதல் நாற்பது ரூபாய் வாங்கிவிடுகிறார்கள். நான் போன சமயத்தில் அப்பையன் இல்லை. கடைக்குள் ஒருவர் இருந்தார். உள்ளே சென்று சொன்னேன். அவரும் நம்மைப்போலவே மொபைல் பைத்தியம் போல. "பையன் வெளிய போயிருக்கான், ஒரு ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க வந்துருவான்" என்று சொல்லிவிட்டு, மீண்டும் ஆன்டராய்டில் ஆட்காட்டி விரலால் தடவ ஆரம்பித்தார். இருசக்கர வாகனங்களை இவரும், அங்கு வேலை பார்க்கும் அப்பையனும்  சர்வீஸ் செய்வதை பார்த்திருக்கிறேன். இவரும் அப்பையன் போல ஒருகாலத்தில் யாரிடமாவது தொழிலாளியாக இருந்துதான் இப்போது முதலாளியாக உயர்ந்திருப்பார். இப்போது  இந்த சின்ன வேலையையெல்லாம் செய்ய மனம் ஒப்பவில்லை போலும்.

நானும் பைக்கின் மேல் அமர்ந்துகொண்டு மொபைலை நோண்ட ஆரம்பித்தேன். ஐந்து நிமிடம் முடிந்து ஆறாவது  நிமிடத்திற்குள் நானும் என் யுனிகார்னும் நுழைந்தோம். ஆறு ஏழு எட்டு என பத்தாவது நிமிடமும் கடந்திருந்தது. நான் முதலாளியின் அருகில் சென்று "என்னங்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? நான் வேணா போய்ட்டு அப்புறம் வரவா?" என்றேன். "அநேகமா வந்துகிட்டு இருப்பாப்ல. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க" என்றார் அம்முதலாளி. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தொழிலாளி வந்தார். மூன்று நிமிடத்தில் வேலையை முடித்தார். நாற்பது ரூபாயை முதலாளி வாங்கிக்கொண்டார்.

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரத்தின் மையப் பகுதியில் ஆறு மாதத்திற்கு முன்னால் , மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். நான் தங்கியிருந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்டும் அப்பகுதியின் காஸ்டலியான அப்பார்ட்மெண்ட்களில் ஒன்று. அலுவலகம் முடிந்து திரும்பிய உடன் அங்கிருக்கும் ஜிம்முக்குப் போவது வழக்கம். அப்படி ஒருநாள் சென்றபோது ஜிம்முக்கான அக்சஸ் கார்டு வேலைசெய்யவில்லை. வரவேற்பறைக்குச் சென்று கார்டு ஒர்க் ஆகவில்லை எனச் சொல்லலாம் என வந்தபோது, வரவேற்பறைக்கு சற்று முன்னரே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இருந்தார். அதுவரை அவரை நான் பார்த்ததில்லை.

கையில் கார்டுடன் வருவத்தைப் பார்த்த அவர், "ஏதாவது உதவி தேவைப்படுகிரதா?" என்றார். விபரத்தை சொன்னவுடன், "இப்போதைக்கு கார்டில் இருக்கும் பிரச்னையை சரி செய்யமுடியாது. சாவியை வைத்து நான் திறந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு,
அவராகவே சாவியை எடுத்துக்கொண்டு, என்னோடு வந்து ஜிம் அறையைத் திறந்துவிட்டார்.

என்னோடு அவர் வரும்போது, "நான் இதுவரை உங்களை இங்கு பார்த்ததில்லையே. இங்குதான் பணிபுரிகிறீர்களா?" எனக் கேட்டபோது, அவர் சொன்ன பதில் "I am the owner of this appartment".

#முதலாளிடா 

Thursday, November 23, 2017

நின்று போன உதிரம்

அவளை லிங்கம்மா என்றுதான்
அழைப்போம்.
சிறிது மனநலம் குன்றியவள்
அதனால்தான் எல்லோருக்கும்
அவள் ஆகிப்போனாள் .
கொடுத்தால் தின்பாள்
விரட்டினால் வீதிவழியே அலைவாள்
பழைய துணிகளைக் கொடுத்தால்
பொட்டலமாக்கி
வயிற்றோடு சேர்த்துக் கட்டி
சேலையால் மூடிக்கொள்வாள்.
"எப்படிப் போறா பாரு
நிறை மாசக் காரி மாதிரி"
இப்படித்தான் ஊரே பேசும்.
கண்மாய்க் கரையோரமிருந்த
வேப்பமரம்தான் அவளுக்கு எல்லாமே.
எப்போதாவது காக்காய்க் குளியல்
போடுவாள் போலும்.
அன்று வேறு பழைய துணி மாற்றியிருப்பாள்.
ஒருநாள் காலையில்
ஊரே திரண்டு அந்த வேப்பமரத்தின்
முன்னால் நின்று கொண்டிருந்தது.
லிங்கம்மா நிறைமாதக் கர்ப்பிணி போலவே
வயிறு பெருத்து தொங்கிக் கொண்டிருந்தாள்.
கழுத்தை இறுக்கிய சேலையை அறுத்து
கீழே கிடத்திவிட்டு
வயிற்றில் கட்டியிருந்த பொட்டலத்தை
அவிழ்த்து எறிவதற்காக
சேலையை விலக்கினார்கள்
பொட்டலம் அங்கு இல்லை.
மரத்தின் மீதிருந்த காக்கைகள்
கா..கா..வென கரைந்து கொண்டிருந்தன.
- உழவன்

Sunday, October 15, 2017

இழப்பு

எல்லாம் முடிந்தது. அம்மா (பாட்டி) தன் மூச்சை நிறுத்தி மூன்று நாட்கள் ஆகிவிட்டன.

எண்பது வயதைத் தாண்டி, எல்லா வாழ்வையும் வாழ்ந்து பார்த்தவள்தான் எனினும் கடைசி இரண்டு வருடங்கள் ஒரே படுக்கையில் வாடிவிட்டாள் .

பேருந்து நிலையத்தில் இந்த ஊருக்குப் போக எந்தப் பேருந்தில் போகவேண்டும் என அருகில் இருந்தவர்களிடம் கேட்டுக் கேட்டுப் போனவள், இந்தக் கூச்சத்திலிருந்து விடுபட, என்னைப் பள்ளிக்கு அனுப்பி எனக்காகக் காத்திருந்தவள். எனக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவுடன், நான் மூன்றாம் வகுப்பு படித்தபோதே எனக்கு நாற்பது ரூபாயில் வாட்ச் வாங்கிக் கொடுத்து, இனி நான் யாரிடமும் நேரம் கேட்கத் தேவையில்லை; பேருந்தின் போர்டு படித்துச் சொல்ல யாரையும் நாடவேண்டியதில்லை என பூரித்துச் சொன்னவள்.

இந்த ஆறடி உயரத்தின் ஆட்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டுதான் இந்த உலகைக் காண ஆரம்பித்தேன்.

அவளது தியாகம் இன்னமும் மனசைப் பிசைந்து கொண்டேயிருக்கிறது. அவளை நினைக்கும்போதெல்லாம் அழுகை இன்னமும் வெடித்துக் கிளம்பிக்கொண்டே இருக்கிறது. மருத்துவரால் கைவிரிக்கப்பட்ட புதன் மாலையிலிருந்து அவளின் கடைசி நிமிடங்கள் ஒவ்வொன்றாய்க் குறைய ஆரம்பித்தன.

தலைமாட்டில் அமர்ந்துகொண்டு அம்மா அம்மா என அழுதுகொண்டு, வாயைப் பிரித்து கொஞ்சம் பாலை ஊற்றுவதெல்லாம் வரமா இல்லை சாபமா எனத் தெரியவில்லை.

இவர்கள் இல்லையென்றால் நான் இல்லை என்கிற இடத்தில் மூன்று பேர் இருந்தார்கள். இப்போது அதில் ஒருவர் இல்லை.

மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான் என்றாலும், ஆண்டு அனுபவித்தே வாழ்ந்து மறைந்திருக்கிறாள் என்பதே ஒரேயொரு ஆறுதல்.

மறைவு: 13.10.2017 வெள்ளி அதிகாலை 1.45

Friday, July 21, 2017

ஆண்பால் - பெண்பால் - தாய்ப்பால்

குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டே, பல்பொருள் அங்காடியில் தனக்கான பொருட்களை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு நடந்து செல்லும் பெண்மணியை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? மேற்கத்தியக் கலாச்சாரம் நம் கலாச்சாரத்தைவிட முற்றிலும் வேறுபட்டது. அது நமக்கு ஒத்துவராது என்றுதானே நாம் இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறோம்.

இங்கிருக்கும் பெண்கள் எப்போதும்  தன் உடையைச் சரிசெய்துகொண்டே இருப்பதைப் பார்த்ததேயில்லை. தன் உடலில் அங்கு தெரியக் கூடாது; இங்கு தெரியக்கூடாது என்று அதை மறைப்பதிலேயே தன் முழுக்கவனத்தையும் நாள்முழுக்க செலுத்துவதுமில்லை. அவர்கள் அவர்களாக வாழ்கிறார்கள். அவர்களுக்கான உடையை அவர்களே முடிவு செய்கிறார்கள். இங்கிருக்கும் யாரும் அதனைக் குறுகுறுவெனப் பார்ப்பதுமில்லை. இன்னும் சொல்லப்போனால், இங்கிருக்கும் வீதிகளிலும், பூங்காக்களிலும் நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். புணர்தலைத் தவிர.

இவை எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். இப்போது முதல் பத்தியின் முதல் வரிக்கு வாருங்கள். ஒரு மிகப் பெரிய பல்பொருள் அங்காடியில், டிராலியைத் தள்ளிக்கொண்டு தனக்கான பொருட்களை எடுத்துக் போட்டுக்கொண்டே வருகிறார்  ஒரு பெண். தன் மார்பில் தொட்டில் போன்று கட்டப்பட்ட ஒரு துணிக்குள்ளிருக்கும் கைக்குழந்தை  அன்னையின் திறந்த மார்பில் பால்
குடித்துக் கொண்டிருக்கிறது. போகிறவர் வருகிறவர் என யாரும் இதனை வேடிக்கை பார்க்கவில்லை. அவரவர் அவரவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய உயர்ந்த குணம். ஒரு சமூகத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் ஒரு பெண்ணால் இதுபோன்று பொதுவெளியில் குழந்தைக்குப் பாலூட்டமுடியும். இப்போதுதான் நாம் சானிட்டரி நாப்கினைப் பற்றியே பேச ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் நாம் வளரவேண்டிய உயரம் எவ்வளவோ இருக்கிறது.

இந்த விஷயத்தில் இச்சமூகம் நம்மைவிட எவ்வளவோ உயர்ந்ததாகவே இருக்கிறது. இங்கிருக்கும் அனைவரும் ஆண்கள், பெண்கள் என்கிற வேறுபாடின்றி அனைவரும் புகை பிடிக்கிறார்கள்; மது அருந்துகிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். இவை எல்லாவற்றையும் தாண்டி நாம் இவர்களிடம்  கற்க வேண்டியதும் நிறைய இருக்கிறது.

#இங்கிலாந்து_பயணம்

Tuesday, July 18, 2017

உச்

இங்குதான்
அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த
பணக்காரன்
அதிசயமாய்ப் பார்க்கப்படுகிறார்.

இங்குதான்
கையூட்டு வாங்காத காவலர்
அதிசயமாய்ப் பார்க்கப்படுகிறார்.

இங்குதான்
சைக்கிளில் வரும் அரசியல்வாதி
அதிசயமாய்ப் பார்க்கப்படுகிறார்.

இங்குதான்
தலைக்கு டை அடிக்காத சினிமா நட்சத்திரம்
அதிசயமாய்ப் பார்க்கப்படுகிறார்.

அப்படியெனில்
இங்குதானே
மதுவுக்கெதிராகப் போராடியவளின் கை முறிக்கப்படும் .

அப்படியெனில்
இங்குதானே
உரிமைகளுக்காகப் போராடியவனுக்குத் தண்ணீர் கொடுத்தவர்களின் குடிசைகள் கொழுத்தப்படும்.

அப்படியெனில்
இங்குதானே
வீதிவீதியாய்ச் சென்று
விவசாயம் காக்க அழைப்புவிடுத்தவளின்
குரல்வளை நெறிக்கப்படும்.

அப்படியெனில்
இங்குதானே
மெழுகுவர்த்தி ஏந்தியவனின் கைகள்
பின்புறமாய் இறுகக் கட்டப்படும் .

இதுதெரியாது
அவ்வப்போது உச் மட்டும் கொட்டிக்கொள்கிறோம்.

- உழவன்